புதுடெல்லி: டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார்.
இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100 நரம்பு கம்பிகள் உள்ளன. இதன் காரணமாக பண்டைய காலங்களில் சந்தூர் இசைக் கருவியை ‘‘சத தந்த்ரி வீணை’’ என்றழைத்தனர். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி சந்தித்துப் பேசினார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது பல இசைக் கருவிகள் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சந்தூர் இசைக்கருவியை இசைத்த கலைஞர், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியை சந்தூரை இசைக்க அழைப்பு விடுத்தார். உடனிருந்த பிரதமர் மோடி சந்தூரை இசைப்பதற்கான கம்பிகளை டகாய்ச்சியிடம் வழங்கினார். பிரதமர் மோடியின் அறிவுரைப்படி சந்தூர் இசைக் கருவியை டகாய்ச்சி மிகவும் அற்புதமாக இசைத்தார். பிரதமர் மோடி உட்பட அங்கிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி மனதார வாழ்த்து தெரிவித்தனர்.
ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி பள்ளிப் பருவம் முதலே இசையில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். குறிப்பாக டிரம்ஸ் இசைப்பதில் அவர் தேர்ச்சி பெற்றவர். பல்வேறு இசைக் கச்சேரிகளில் அவர் டிரம்ஸ் இசைத்துள்ளார். முதல் முயற்சியிலேயே அவர் சந்தூர் இசைக் கருவியை அற்புதமாக இசைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் சனே டகாய்ச்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டபதிவில், “பிரதமர் மோடி மிகச் சிறப்பான விருந்தினை அளித்தார். இந்திய உணவு வகைகளின் சுவை, பிரதமர் மோடியின் உபசரிப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஜப்பான், இந்தியா நட்புறவு மட்டுமன்றி பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் மனம் திறந்து பேசினேன். இரு நாடுகள் இடையிலான உறவு புதிய உச்சத்தை தொடும்’’ என்று தெரிவித்துள்ளார்.