புதுடெல்லி: இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி போலீஸார், அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுதந்திரா பரத்வாஜை டெல்லி போலீஸார் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் நேற்று கைது செய்தனர்.
சுதந்திரா பரத்வாஜுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், டெல்லியில் உள்ள கார்கர்டூமா நீதிமன்ற வளாகத்தில் தொடர்புடைய நீதிபதி முன் அவரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் தாக்கப்பட்டார். இதற்கு காரணமான இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜ் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பு சி.ஜே.பி உறுப்பினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவுரவ் தாஸ், “சுதந்திர பரத்வாஜ், நிஷு ஆசாத்துக்கு மிரட்டல்கள் விடுத்துள்ளார். அவரது தந்தை சஞ்சய் குமாரை தாக்கி உள்ளார்.
இதை அவரே சமீபத்திய நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார். கபில் மிஸ்ரா, சிராக் பாஸ்வான் ஆகியோரின் ஆதரவால் தான் விடுவிக்கப்பட்டதாக அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே, அவர் மீது காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்” என்று தெரிவித்திருந்தார்.
சுதந்திர பரத்வாஜ் அளித்த நேர்காணல் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், சஞ்சய் குமாரை தான் தாக்கியது குறித்தும், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு குறித்தும் அவர் விளக்கி இருந்தார். அதன் காரணமாகவே தான் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில், அந்த வீடியோ போலியானது என்றும், தற்காத்துக்கொள்ளும் நோக்கிலேயே சஞ்சய் குமாரை தாக்கியதாகவும் அவர் கூறி இருந்தார்.
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் உடன் தனக்கு இருக்கும் நெருக்கம் குறித்து சுதந்திர பரத்வாஜ் கூறி இருந்த நிலையில், அக்கட்சி இதனை மறுத்துள்ளது. மேலும், சுதந்திர பரத்வாஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.