புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அந்த ஆண்டில் ஆகஸ்ட் 28-ம் தேதி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டத்தை அவர் தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவற்றில் ரூ.3.17 லட்சம் கோடி வைப்புத் தொகை உள்ளது.
ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மேலும் 78 சதவீத வங்கிக் கணக்குகள் கிராமங்களில் உள்ளன. இந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அவசர தேவைகளுக்காக ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதியும் அளிக்கப்படுகிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு 41.29 கோடிக்கும் அதிகமான ரூபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த வங்கிக் கணக்கு திட்டத்தால் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்திட்டம், ஈடு இணையற்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.