ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த நர்ஸ் சர்லா பட் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஜே.கே.எல்.எஃப் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்டோர் மீது மாநில புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் 737 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, நகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் அருகே பணியாற்றி வந்த காஷ்மீரி பண்டிட் பெண் சர்லா பட், தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். அதன் பிறகு அவர் கடுமையான சித்திரவதைகளுக்கும், பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டார்.
இறுதியில், ஸ்ரீநகரின் மல்பாக் பகுதியில் உள்ள உமர் காலனியில் வைத்து தானியங்கி துப்பாக்கியால் சுடப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அக்காலகட்டத்தில் பள்ளத்தாக்கில் நிலவிய தீவிரவாதச் சூழல் மற்றும் சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் காரணமாக, இந்த வழக்கின் உண்மைகள் பல ஆண்டுகளாக வெளிவராமல் முடக்கப்பட்டிருந்தன.
தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.ஏ) நடத்திய விரிவான விசாரணையில், இக்கொடூரச் சதியின் பின்னணியில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் அப்போதைய தலைமை கமாண்டராக இருந்த முகமது யாசின் மாலிக், குர்ஷித் அகமது சல்கூ, அப்துல் ஹமீத் ஷேக், முகமது யூசுப் சோஃபி மற்றும் குலாம் முகமது தப்லூ ஆகியோர் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் அப்துல் ஹமீத் ஷேக், முகமது யூசுப் மற்றும் குலாம் முகமது ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். முக்கியக் குற்றவாளியான யாசின் மாலிக், தற்போதைய நிலையில் மற்றொரு வழக்கில் டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
சர்லா பட்டை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதியான குர்ஷித் அகமது சல்கூ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குத் தப்பியோடிவிட்டதால், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.