புதுடெல்லி: மத்திய பட்ஜெட் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, ‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டாக இருக்கும். பிரதமரின் சீர்திருத்த விரைவு ரயில், வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி அதிவேகமாக முன்னேறும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘‘நம்பிக்கை வையுங்கள். கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசாங்கம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கியே செயல்பட்டு வருகிறது. கடந்த 2014 முதல் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பட்ஜெட்டுகளும் அந்த இலக்கை நோக்கிய படிகளாகவே இருந்துள்ளன. இந்த பட்ஜெட்டும் இந்தியாவை வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கான மற்றொரு படியாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், ‘‘எந்த அரசாங்கத்திடம் எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையோ அந்த அரசாங்கம் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? கடந்த சில பட்ஜெட்டுகள் 5% மக்களுக்காக மட்டுமே இருந்தது என்பதைப் பார்த்தோம். அரசாங்கம் தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதா என்பதை மதிப்பிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலைக்கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்படி, ஓராண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. இன்றைய பட்ஜெட்டில் நிலைக்கழிவு ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குறு, சிறு விவசாயிகளுக்கான ஆண்டு நிதியுதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசின் ‘பிஎம் சூர்ய கர்’ மானியத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கான மானிய உதவி, மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு வரம்பு ஆகியவையும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பதால், அவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
2017 முதல் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், அம்ரித் பாரத், வந்தே பாரத் உட்பட 300-க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.