நியூயார்க்: இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று கருதும் எந்தவொரு நபரும் உண்மையான இந்துவாக இருக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், நியூயார்க்கில் நடைபெற்ற ‘ஒரே உலகம், ஒரே மனிதநேயம்’ என்ற மதத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: உங்களை நீங்கள் இந்து என்று சொல்லிக்கொண்டால், அனைத்து வழிகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன என்பதை நீங்கள் நம்ப வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியமும் சுயமரியாதையும் உண்டு; நம்மிடையே எந்தவொரு அடிப்படை வேறுபாடும் இல்லை.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று எந்தவொரு இந்துவாவது நினைத்தால், அவர் இந்துவாகவே இருக்க முடியாது. அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்வதும், வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதுமே இந்துத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ‘நான்’, ‘என்னுடையது’ என்பதில் தீர்வு இல்லை; ‘நாம்’, ‘நம்முடையது’ என்பதே உண்மையான தீர்வு.
மேலும், பன்முகத்தன்மை என்பது இயற்கை விதி, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எவ்வித மதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் சேவை செய்து வருகின்றனர். மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றுதான். இவ்வாறு அவர் பேசினார். நியூயார்க்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க மேடிசன் சதுக்க அரங்கத்தில் நடைபெறவுள்ள பெரும் மக்கள் கூட்டத்துக்கு முன்னதாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மோகன் பாகவத் ஆற்றிய உரை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மோகன் பாகவத் நியூயார்க்கில் உள்ள இஸ்கான் கோயிலுக்கும், பக்தி மையத்திற்கும் சென்றார். அங்கு வீடற்ற மக்களுக்கு உணவு வழங்கிப் பேசிய அவர், உலகில் உள்ள சண்டைகளுக்கும் பிரிவினைகளுக்கும் கிருஷ்ண பக்தி வழியில் தீர்வு காணலாம் என்று கூறினார்.