புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பியது குற்றமா என்று ஆம் ஆத்மி தலைமையிடம் ராகவ் சத்தா கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆம் ஆத்மியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா, அந்த கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். அந்த பதவியில் இருந்து நேற்று முன்தினம் அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய துணைத் தலைவராக அசோக் மிட்டலை ஆம் ஆத்மி தலைமை நியமித்து உள்ளது.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டபோது கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரியில் மதுபான கடைகள் ஒதுக்கீட்டு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாகவும் ராகவ் சத்தா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பான கருத்துகளை அவர் எடுத்துரைக்கவில்லை. இதன் காரணமாகவே மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ராகவ் சத்தா நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பினேன். இது ஒரு குற்றமா? அவையில் நான் பேசக்கூடாது என்று ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. நான் சாமானிய மக்களுக்காக குரல் கொடுக்கிறேன். நான் பேசக்கூடாது என்று தடுப்பது ஏன்?
விமான நிலையங்களில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டெலிவரி ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருகிறது. சுங்கச்சாவடி கொள்ளை முதல் வங்கிக் கொள்ளை வரை அனைத்து பிரச்சினைகளையும் மாநிலங்களவையில் எழுப்பி வருகிறேன்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஓராண்டில் 12 மாதங்களுக்குப் பதில் 13 மாதங்களுக்கான கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கின்றன. ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் அழைப்புகள் நிறுத்தப்படுகின்றன. இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். இதனால் ஆம் ஆத்மிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது. எனது குரலை ஒடுக்க சிலர் விரும்புகின்றனர். எனது மவுனத்தை தோல்வியாக கருத வேண்டாம். நான் நதி போன்றவன். நான் ஆர்ப்பரித்தால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவ்வாறு ராகவ் தெரிவித்துள்ளார்.