புதுடெல்லி: பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்க திமுக அச்சாரமிடுவதாகத் தெரிகிறது. உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்தித்த எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் நிறுவனர் மம்தா பானர்ஜியையும் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இச்சூழலில், மீண்டும் தேசிய அரசியலில் 3-வது அணிக்கான பேச்சு தொடங்கிவிட்டது. இது, பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து அமைப்பதாக இருக்கும்.
இந்த முறை அதற்கான அடித்தளம் அமைப்பதில் முதன் முறையாக திமுக இறங்கி உள்ளது. இதன்மூலம், தேசிய அரசியலில் தனது பங்கை திமுக மறுவரையறை செய்ய முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கான பொறுப்பை திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி ஏற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2007-ல் முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக அமர்த்தப்பட்டார். அப்போது முதல் அவரது நட்பு தேசிய தலைவர்களிடம் உருவாகி வளர்ந்துள்ளது.
தற்போது, தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியாக இருப்பவருக்கு, தேசிய அரசியல் கூட்டங்களிலும் முக்கியப் பங்கு இருந்து வருகிறது. இதனால், எம்.பி. கனிமொழியே இந்த பணிக்கு பொருத்தமானவர் என திமுக கருதியுள்ளது.
கடந்த சில காலமாகவே பல முக்கிய பிராந்தியத் தலைவர்களை கனிமொழி சந்தித்து வருகிறார். கடந்த 12-ல் மும்பை சென்றவர் சிவசேனா யுபிடி கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரேவைச் சந்தித்தார். இது, தொகுதி மறுசீரமைப்பிற்கானதாக தாக்கரே தரப்பில் கூறப்பட்டது.
அதேபோல், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவாரையும் எம்.பி.கனிமொழி சந்தித்துள்ளார். இதற்கு, சரத்பவாரின் மகளான எம்.பி. சுப்ரியா சுலேவின் உற்ற தோழி கனிமொழி என்பது சுட்டிக் காட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் கொல்கத்தா சென்று டிஎம்சி நிறுவனர் மம்தாவையும் கனிமொழி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
கொல்கத்தாவிலிருந்து கனிமொழி நேரடியாக டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதையடுத்து, மேலும் சில பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களை கனிமொழி சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த சந்திப்புகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனவே, இவை அனைத்தும் தேசிய அரசியலில் ஒரு ரகசியமான சந்திப்பாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இது மூன்றாவதாக ஒரு புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதல், காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால், தமிழகத்தில் எதிர்கட்சியாகி விட்ட திமுகவிற்கு, தேசிய அளவில் ஒரு பலம் அவசியமாகிறது. இதற்காக, மத்தியில் தலைமை ஏற்றுள்ள பாஜகவுடன் திமுக நட்பு பேச்சுக்கள் எழுந்தன. இது தமிழகத்திற்கு பொருத்தமாக இருக்காது என்ற நிலையில், தற்போது, 3-வது அணிக்கான முயற்சியைத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.