சிவகங்கை: காளையார்கோவிலில் இரட்டைக் கொலையை கண்டித்து மறியலில் ஈடுபட்டோர் மீது போலீஸார் தடியடி நடத்தி 72 பேரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே காயாஓடை புது குடியிருப்பைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். சிறுவேலங்குடியைச் சேர்ந்தவர் பூப்பாண்டி. சிவகங்கை அருகேயுள்ள கொடிக்காடு கண்மாய் கரையில் கடந்த செப்.16-ம் தேதி மது அருந்தியுள்ளனர். அப்போது, ஒரு கும்பல் அவர்களை வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர். மேலும், விசாரணையில் அந்தக் கும்பல் ஆள் மாறி கொலை செய்தது தெரியவந்தது.
இதை ஏற்க மறுத்தும் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் சிவகங்கையில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று காளையார்கோவிலில் காவல் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்பி அபிஷேக் குப்தா, கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலையானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தவெக எம்எல்ஏ: கொலையானவர்களின் உறவினர்களிடம் சிவகங்கை எம்எல்ஏ குழந்தைராணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இழப்பீடு, அரசு வேலை தர வேண்டும் என கோரப்பட்டது. தொடர்ந்து பேசிய எம்எல்ஏ பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.