புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வருவாய் அதிகாரியின் 22 வயது மகள் அண்மையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியைக் கைது செய்துள்ளளனர். அவரது பெயர் ராகுல் மீனா என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தன்னுடைய குற்றங்களுக்காக வருந்தவில்லை என்றும், விசாரணையின் போது வாக்குமூலத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். போலீஸாரிடமும், நீதிமன்றத்திலும் அடிக்கடி மாற்றி மாற்றி வாக்குமூலத்தை கூறி வருகிறார்.
நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் தன்னுடைய பேசும்பாணியை அவ்வப்போது மாற்றிக் கொண்டு நீதிபதி முன் பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது. நான் குற்றம் செய்துவிட்டேன், தவறுதான் என்று நீதிபதியிடம் ராகுல் கூறியதைத் தொடர்ந்து, அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி, குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது என்னுடைய வாக்குமூலமாக நான் கருதவில்லை என்று தெரிவித்திருக்கிறார். போலீஸாரிடம் ஒரு மாதிரியாகவும், நீதிமன்றத்தில் ஒரு மாதிரியாகவும் ராகுல் பேசியுள்ளார். இவ்வாறு அவர் மாற்றி மாற்றி பேசி வருவது போலீஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் நடந்த வீட்டில், ராகுல் 8 மாதங்கள் வேலை செய்துள்ளார். பண விவகாரத்தில் அவர் ஏதோ முறைகேடு செய்திருந்ததால் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை வேலையை விட்டு துரத்தியுள்ளனர். ஆனால், அவருக்கு அந்த வீட்டின் அனைத்து விஷயங்களும் அத்துப்படியாக இருந்துள்ளன. வீட்டுக்குள் செல்லும் வழி, பயோ-மெட்ரிக் லாக்கர், கண்காணிப்பு கேமரா வசதி போன்ற விஷயங்களை அவர் நன்றாக அறிந்து வைத்துள்ளார்.
இந்த குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் தனது நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில், ராகுல் பாலியல் தொழிலாளிகளுக்காக ஏராளமான பணத்தை செலவு செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், ஐஆர்எஸ் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து அவரது மகளிடம் பணம் கேட்ட போது அவர் தரவில்லையென்றும், அதனால்தான் குற்றத்தைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் மீனா மேலும் கூறும்போது, “ஐஆர்எஸ் அதிகாரி வீட்டில் பணம், நகையை திருடத்தான் வந்தேன். எனக்கு அதிக பணம் தேவையாக இருந்தது. ஐஆர்எஸ் அதிகாரியின் மகளை கொலை செய்ய நினைக்கவில்லை. ஆனால், அது நடந்துவிட்டது. எப்படியாவது பணத்தை புரட்ட வேண்டிய தேவை இருந்தது’’ என்றார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அதிக பாதுகாப்பு நிறைந்த குடியிருப்பில் அந்த ஐஆர்எஸ் அதிகாரி வசித்து வருகிறார். வீட்டுக்கு ராகுல் வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பணத்தை எடுப்பதற்கு முன்பு அந்த பெண்ணை அடித்து காயப்படுத்தியுள்ளார். பின்னர் கீழே விழுந்ததும், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணின் கைரேகையை, பயோ மெட்ரிக் லாக்கரில் வைத்து விட்டு வெளியேறியுள்ளார். செல்போன் பேசுவது போல பேசிக் கொண்டே தப்பியோடிவிட்டார்’’ என்றார்.