கோப்புப்படம்
புதுடெல்லி: ‘ஹலால் உணவு’ என்பதற்கு இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உணவு என்ற பொருள் ஆகும்.
இந்நிலையில் ரயில்களில் முஸ்லிம்களுக்கான ஹலால் முறையிலான இறைச்சியை மட்டுமே இந்தியன் ரயில்வே வழங்குவதாக மத்திய பிரதேசம், போபாலை சேர்ந்த சுனில் அஹிர்வார் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில், இது நியாயமற்ற பாகுபாட்டை உருவாக்குவதாக கூறியிருந்தார். இப்புகார், 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. புகாரை ஆணையத்தின் உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான அமர்வு, கடந்த நவம்பர் 24-ம் விசாரித்தது. இதையடுத்து ரயில்வே துறைக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ரயில்களில் ‘ஹலால்' சான்றளிக்கப்பட்ட உணவு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதற்கு அதிகாரப்பூர்வ உத்தரவு அல்லது விதிமுறைகள் எதுவும் இல்லை என்று ரயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது.