புது டெல்லி: ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவிலுள்ள வெளிநாட்டினர் விசா நீட்டிப்புகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை அணுகுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரான் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் (MEA) முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டினரும், தங்கள் விசா நீட்டிப்பு அல்லது தங்குதலை முறைப்படுத்த உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவிகளை வழங்குவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து காரணமாக இந்தியாவில் எத்தனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கிய பின்னர், மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் இந்தியா உட்பட பிற நாடுகளில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) மேலும் 22 சர்வதேச சேவைகளை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக இதுவரை ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் மார்ச் 1 ஆம் தேதி 444 சர்வதேச விமானங்களை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.