லக்னோ: ‘உத்தர பிரதேசம் ஜவுளி மாநாடு-2026’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
குற்றம், குற்றவாளிகள் மற்றும் ஊழலுக்கு எதிராக ‘பூஜ்ய சகிப்புத்தன்மை’ கடைப்பிடிக்கப்படுகிறது. உத்தர பிரதேசம் ஊரடங்கு இல்லாத, கலவரம் இல்லாத, மாஃபியாக்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. இதனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. இதில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தத் தயாராக உள்ளன.
65 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 14,000-லிருந்து 35,000-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக மாநிலம் உபரி வருவாய் கொண்டதாக மாறியுள்ளதுடன், முதலீட்டாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனது அலுவலகமே இதனை நேரடியாக கண்காணிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.