அயோத்தி: ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோயில் அறக்கட்டளை தலைவர் மகந்த் கமல் நியாயன் தாஸ் வலியுறுத்தி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், தற்போது தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று கோயில் அறக்கட்டளை தலைவர் மகந்த் கமல் நியாயன் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த நன்கொடைகளில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அப்படி, ராமர் கோயில் நன்கொடைகளில் ஏதேனும் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டால் அது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் கூறும்போது, “ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. உ.பி.யில் கடந்த கால சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமல் இந்த மாநிலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது” என்றார்.