திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கையாக மரணம் எய்தினால், அவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகை வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதன் முறையாக நேற்று திருமலையில் அமல்படுத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் இயற்கையாக மரணம் எய்தினால் அவர்களுக்கு எல்ஐசி காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம், பக்தர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என, கடந்த செப். 9-ம் தேதி திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இந்த திட்டத்துக்கு ‘ஸ்ரீவாரி யாத்ர சுரக் ஷா’ திட்டம் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், திருமலையில் இத்திட்டத்தின்படி, கடந்த 2 மாதங்களில் சுவாமி தரிசனத்துக்கு வந்து இயற்கையாக மரணம் எய்திய 17 பேரில், முதற்கட்டமாக 7 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காப்பீடு தொகையை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி ஆகியோர் நேற்று வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா பேசியதாவது, “ஸ்ரீவாரி யாத்ர சுரக் ஷா திட்டத்தின் கீழ், நாட்டிலேயே முதன்முறையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், அல்லது சர்வ தரிசனம் மூலம் நேரடியாக வந்து சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மரணம் ஏற்பட்டாலும் திருப்பதி தேவஸ்தானம் எல்ஐசியுடன் இணைந்து இந்த காப்பீடு தொகையை வழங்கும். இத்திட்டம், திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வந்து பக்தர்களுக்கு இலவச சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவகர்களுக்கும் பொருந்தும்” என்றார்.
நாட்டுக்கே முன்னோடி
கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி பேசும்போது, “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி அமல் படுத்தி உள்ளோம். இதன்மூலம், நாட்டுக்கே முன்னோடியாக திருப்பதி தேவஸ்தானம் திகழ்கிறது” என்றார்.