

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
ஆதரவு | விசிக தலைவர் திருமாவளவன்: திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபமண்டபத்தில் தீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள். சதி முயற்சியை முறியடித்து சமூகநல்லிணக்கத்தை பாதுகாத்துள்ள முதல்வர் விஜய்க்கும் பாராட்டுகள். தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு பாராட்டுகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள கல்தூண் மண்டபத்தில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் வழக்கம்போல் ஏற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தவெக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும், பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மமக தலைவர் ஜவாஹிருல்லா: தமிழக அரசு எந்த அழுத்தத்துக்கும் அடிபணியாமல், பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. மத உணர்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி: பல நெருக்கடிகள் இருந்த நிலையிலும், தமிழக மக்களுடைய மன உணர்வுகளை புரிந்து கொண்டு, பக்தர்களின் பாரம்பரிய பண்பாட்டை காப்பாற்றியதற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் பாராட்டுகள். திமுகவை போல் தவெக அரசும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது வரவேற்கத்தக்கது.
எதிர்ப்பு | அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எந்த அரசாங்கமாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமான கடமையாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டால், அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. உச்ச நீதிமன்றமே, நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதித்துறை அமைப்பு என்பதால், அதன் உத்தரவுகளை அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறினால் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சிறுபான்மையினரின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தினரின் மொத்த வாக்குகளையும் வாரிச்சுருட்டிக் கொள்ளவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, தெரிந்தே மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார் முதல்வர் விஜய். உச்சநீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு, அழிவுக்கான ‘கவுன்ட்டவுன்’ தொடங்கிவிட்டது. முதல்வர் விஜயையும், அவரது இந்து விரோத அரசையும் சட்டம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. அதிகார ஆணவத்தில் மிதக்கும் தவெக அரசுக்கு முருகப்பெருமான் தக்க பாடத்தை புகட்டுவார்.
வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை: நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவும். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக, இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பது ஆளும் அரசுக்கு புரியவில்லை. என்ன காரணம் கூறினாலும் தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திவிட்டது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தும் தீபம் ஏற்றாமல் தவெக அரசு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையும், மோசடியும் செய்துள்ளது. இந்த அரசுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய நபர்கள் நக்சலைட், கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அரசு நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. முருகன் நிச்சயமாக பாடம் கற்றுக் கொடுப்பார். இந்த நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும். கடந்த திமுக ஆட்சியில் 2 அதிகாரிகள் மன்னிப்பு கேட்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியது. அந்த நீதிபதி சாதாரணமாக மன்னித்து விட்டு விட்டார். ஆனால், நிச்சயமாக உச்ச நீதிமன்றம் இந்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய தண்டனை வழங்கும்.