பாட்னா: பிஹாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் கல்யாண்பூர் அருகில் புதிதாக விராட் ராமாயணக் கோயில் கட்டப்படுகிறது. இங்கு 33 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கம் நிறுவும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பார்வையிட்டார்.
பிறகு கோயில் வளாகத்தை பார்வையிட்ட நிதிஷ் குமார் அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்த சிவலிங்கம் 210 மெட்ரிக் டன் எடை கொண்டது. இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 96 சக்கரங்கள் கொண்ட டிரெய்லர் மூலம் கல்யாண்பூருக்கு கொண்டுவரப்பட்டது. பிஹார் மாநில மத அறக்கட்டளை குழுவின் (பிஎஸ்ஆர்டிசி) உறுப்பினர் சயன் குனால் மற்றும் பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.