புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல், சுயசார்பு இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 136-வது “மனதின் குரல்” நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: கார்கில் போரின் வெற்றி விழாவை இன்று (ஜூலை 26) கொண்டாடுகிறோம். கார்கிலின் உயரமான சிகரங்கள், கடும் குளிர், எதிரிகளின் சவால்களை நமது ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டனர். இந்த நேரத்தில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூர்ந்து தலைவணங்குகிறேன்.
இந்திய கடற்படையில் அண்மையில் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் இணைக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் சுயசார்பு இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது. அண்மையில் இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டேன். அப்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா, இந்தோனேசியா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆயுத உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா புதிய சிகரங்களை தொட்டு வருகிறது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு இயக்கம் பற்றி பேசினேன். தற்போதைய பருவமழையின்போது ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை மிகப்பெரிய இயக்கமாக மாற்ற வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. இந்த போட்டியில் நமது வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமுக்கு மரியாதை
“ஜூலை 27-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் ஆகும். அவர் பன்முகத்தன்மை கொண்டவர். எனினும் அவருடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது ஆசிரியர் பணி. ஒவ்வொருவரும் மிகப் பெரிய கனவு காண வேண்டும் என்று சிறார், இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தினார். இந்த நேரத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீடு தோறும் தேசியக் கொடி
பிரதமர் மோடி பேசும்போது, “சுதந்திர தினத்தை ஒட்டி கடந்த சில ஆண்டுகளாக வீடுதோறும் தேசியக்கொடி யேற்றும் இயக்கத்தை நடத்தி வருகிறோம்.
வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்தாண்டும் வீடுதோறும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டுகிறேன். சுதந்திர தினத்தையொட்டி ஏராளமானோர் புதிய சிந்தனைகளை எனக்கு வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் உங்களது கருத்துகளை mygov இணையத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன்” என்றார்.