ராம் மோகன் நாயுடு |கோப்புப் படம்

 
இந்தியா

“இண்டிகோ நிறுவனத்திடம்தான் தவறு; நடவடிக்கை உறுதி” - விமானப் போக்குவரத்து அமைச்சர்

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: “விமானிகளின் பணி நேர வரம்பு (FDTL) விதிமுறைகள் நவம்பரில் அமலுக்கு வந்த நிலையில், மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை. அப்படியானால், தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது” என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எனவே கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “இந்த பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் உள்ளது என்று நான் சொல்ல முடியும். டெல்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ விமான நிலையங்களில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலைமை சீராகி வருகிறது. மற்ற விமான நிலையங்களிலும் இன்றிரவுக்குள் பிரச்சினை முடிக்கப்படும். மேலும் இண்டிகோ நாளை முதல் குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.

நிலைமை சீராகும்போது, ​சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும். ஆனால் பயணிகள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளாத வகையில், நாளை முதல் செயல்பாடுகள் இருக்கும். இண்டிகோ செயல்பாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்.

விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அமைச்சகமும், ஒழுங்குமுறை ஆணையமும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.

நிலைமையை நாங்கள் முழுமையாக கண்காணித்து வருகிறோம், விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த விதிமுறைகளில் உள்ள சிக்கல்களை எங்களிடம் கூற பல அமைப்புகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். அதனால்தான், இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விசாரிக்கவும், தவறு செய்தவர்களைக் கண்டறியவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப் போகிறோம். தற்போதைய சிக்கல்களுக்கு FDTL வழிகாட்டுதல்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது, ஆனால் மற்ற விமான நிறுவனங்களும் இதே விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாம் இப்போது பேசும் பிரச்சினை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடர்பானது. எனவே தவறு இண்டிகோ நிறுவனத்திடம்தான் உள்ளது. மற்றபடி தவறு முக்கிய மட்டத்திலோ, அமைச்சக மட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் மட்டத்திலோ அல்ல. FDTL அல்லது அமைச்சகத்திடமிருந்து ஏதாவது பிரச்சினை இருந்தால், அனைத்து விமான நிறுவனங்களும் பிரச்சினைகளைச் சந்தித்திருக்க வேண்டும், ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் இது நாங்கள் யாரையும் மகிழ்விக்க விரும்பும் ஒன்றல்ல. அமைச்சகத்தின் கவனம் பயணிகள்தான் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அடுத்த முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் வேலை, எங்கள் பொறுப்பு. எனவே, விசாரணையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT