மும்பை விமான நிலையம்
புதுடெல்லி: தொடர்ந்து 3-வது நாளாக தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.5) காலை முதல் இதுவரையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை சேர்ந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச. 5) நள்ளிரவு 12 மணி வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது இண்டிகோ. இருப்பினும் அண்மைய காலமாக விமான புறப்பாட்டில் தாமதம், விமான சேவை ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சினைகளை இண்டிகோ நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், விமானிகள் உள்ளிட்ட பணியாளர் பற்றாக்குறை மற்றும் மென்பொருள் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் இண்டிகோ விமான சேவையில் பிரச்சினைகள் நீடித்தன. நேற்று மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாடு என சுமார் 550 விமானங்களின் சேவையை இண்டிகோ ரத்து செய்தது. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் டெல்லி என நேற்று இண்டிகோ விமான சேவை ரத்தான காரணத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று சந்தித்தனர். அப்போது பல்வேறு காரணங்களால் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை விமான சேவையில் பாதிப்பு நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், டிச.8-ம் தேதி முதல் இந்த நிலையை சீர் ஆகும் என கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், பிப்ரவரி 10-ம் தேதி வரை குறைக்கப்பட்ட இரவு நேர விமான சேவை சார்ந்த விதிமுறைகளை செயல்படுத்துவதில் இருந்து இண்டிகோ விலக்கு கோரி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
400 இண்டிகோ விமான சேவைகள் ரத்து: இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டுமே மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் என நாடு முழுவதும் சுமார் 400 இண்டிகோ விமான சேவைகள் ரத்து ஆகியுள்ளன. இதில் மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டும் தலா 100 இண்டிகோ விமான சேவைகள் இன்றைய நாளில் ரத்தாகி உள்ளது.
மேலும், இந்த விமான நிலையங்களில் விமானங்களை நிறுத்தும் இடத்தில் இண்டிகோ விமானங்கள் நிற்கின்ற காரணத்தால் சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் இருந்து பிற விமான சேவை நிறுவனங்களின் புறப்பாடு மற்றும் வருகையிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ விமான குழுவினர் பணியில் இல்லாதது இதற்கு காரணம் என தகவல். இந்த நிலையை சீர் செய்ய விமான நிறுவனங்கள், தரைவழி கட்டுப்பாடுகளை கையாளும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் பாதிக்கப்பட்ட விமான நிலையங்கள் பணியாற்றி வருகின்றன.
அதேநேரத்தில் தங்களது பயணம் ரத்தானதை அறிந்த பயணிகள் விமான நிலையங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச.5) நள்ளிரவு 12 மணி வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவை ரத்து: பின்னணி என்ன? - இண்டிகோ விமான சேவை பாதிப்பு மற்றும் ரத்து சார்ந்த சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண பணியாற்றி வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தாமதம் அடுத்த 48 மணி நேரம் வரை தொடர வாய்ப்புள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு, பனி காலம் என்பதால் விமான புறப்பாட்டில் ஏற்பட்டுள்ள கால தாமதம், விமானிகளின் விமானப் பயண நேர வரம்பு, பணியாளர் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் தங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
விமானிகளின் விமானப் பயண நேர வரம்பு சார்ந்து மத்திய அரசின் அறிவிப்பும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 6 முறை விமானத்தை தரையிறக்கிக் கொண்ட விமானிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் 2 முறை மட்டுமே தரையிறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதான் இந்தச் சிக்கலுக்கு முதன்மைக் காரணமாக கருதப்படுகிறது.
மறுபக்கம் இண்டிகோ விமான சேவை ரத்து தொடர்பாக டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு எப்போது தீர்வு காணப்படும் என இண்டிகோ விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்.