புதுடெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம் நேற்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அதில் 161 பயணிகள் இருந்தனர். காலை 10.54-க்கு டெல்லியை நெருங்கியதும் இன்ஜினில் கோளாறு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் முழு அவசர நிலை பிரகடனம் செய்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. விமானத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன்னதாகவே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படியும், விமானிகள் முன்னுரிமை அடிப்படையில் தரையிறங்க அனுமதி கோரினர். விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது’’ என்றார்.