மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முறையிடும் பயணிகள்

 
இந்தியா

“இண்டிகோ பிரச்சினைக்கு மத்திய அரசே காரணம்” - ராகுல் காந்தி

மோகன் கணபதி

புதுடெல்லி: இண்டிகோ விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் ஏகபோக அணுகுமுறையே இண்டிகோவின் படுதோல்விக்குக் காரணம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

விமான சேவையை வழங்குவதில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க வரும் 8ம் தேதி முதல் விமானங்களைக் குறைக்க உள்ளதாக இண்டிகோ விமானம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது. கடிதம் எழுதியதை அடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை முதலே விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படத் தொடங்கின.

தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு கேம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் ஏகபோக அணுகுமுறையே இண்டிகோவின் படுதோல்விக்குக் காரணம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அரசாங்கத்தின் ஏகபோக அணுகுமுறையே இண்டிகோவின் படுதோல்விக்குக் காரணம்.

இதன் காரணமாகவே, தாமதங்கள், ரத்து, உதவியற்ற நிலை போன்ற இழப்புகளை இந்தியர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஏகபோகத்துக்காக அரசு திட்டமிட்டு செயல்படக்கூடாது. ஒவ்வொரு துறையிலும் நியாயமான போட்டி இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த இரண்டு நாட்களாக இண்டிகோவின் நெட்வொர்க் செயல்பாடுகளில் பரவலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்முறை பங்குதாரர்களிடம் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பை கோருகிறோம்.

தாமதங்களின் தொடர்ச்சியான தாக்கத்தைக் குறைத்து இயல்பு நிலையை மீட்டெடுக்க இண்டிகோ குழுக்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன. MOCA, DGCA, BCAS, AAI மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்களின் ஆதரவுடன் அனைத்து முயற்சிகளையும் இண்டிகோ மேற்கொண்டு வருகிறது.

விமான நிலையம் செல்வதற்கு முன்பாக எங்களின் https://goindigo.in/check-flight-status.html-ல் சமீபத்திய நிலையை சரிபார்க்குமாறு நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஏற்பட்ட சிரமத்துக்கு இண்டிகோ ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது. இண்டிகோவின் செயல்பாடுகளை சீர் செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி முதல் இண்டிகோ விமானங்களின் சேவை, இடையூறுகள் அற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT