

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை வந்த புதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து, புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரவுபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், திரவுபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரவுபதி முர்மு வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி செலுத்துகிறார். இதன் பிறகு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2000-ம் ஆண்டில் முதலாவது இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த வரிசையில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.