இந்தியா

உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஐஎன்​எஸ் மகேந்திரகிரி போர்க்​கப்​பல் நேற்று கடற்​படை​யில் இணைக்கப்பட்​டது.

சீன கடற்​படைக்கு நிக​ராக இந்​திய கடற்​படை​யில் போர்க் கப்பல்களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்து உள்​ளது. இதன்​படி 40 நாட்​களுக்கு ஒரு முறை இந்தியக் கடற்​படை​யில் புதி​தாக ஒரு போர்க் கப்​பல் சேர்க்கப்பட்டு வரு​கிறது.

கடந்த 2009-ம் ஆண்​டில் ரூ.45,000 கோடி செல​வில் இந்​தி​யக் கடற்​படைக்​காக 7 போர்க் கப்​பல்​களை தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. இதற்கு ‘பு​ராஜெக்ட் 17ஏ’ என்று பெயரிடப்​பட்​டது. மும்​பை​யில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் (எம்​டிஎஸ்​எல்), கொல்​கத்​தா​வில் உள்ள கார்​டன் ரீச் ஷிப் ​பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினீயர்ஸ் ஆகிய நிறு​வனங்​கள் போர்க் கப்​பல்​களை தயாரிக்க ஒப்​பந்​தங்​கள் வழங்​கப்​பட்​டன. முதல் போர்க் கப்​பலான ஐஎன்​எஸ் நீல​கிரி கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி​யில் கடற்​படை​யில் இணைந்​தது.

இந்த வரிசை​யில் 6-வது போர்க் கப்​பலாக ஐஎன்​எஸ் மகேந்​திர கிரி கடற்​படை​யில் நேற்று இணைக்​கப்​பட்​டது. ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம் கடற்​படை தளத்​தில் நடந்த விழா​வில் மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், இந்​தப் போர்க் கப்​பலை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

மும்​பை​யில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் (எம்​டிஎஸ்​எல்) நிறு​வனம் ஐஎன்​எஸ் மகேந்​திரகிரியை வடிவ​மைத்து உள்​ளது. இதன் நீளம் 149 மீட்​டர், எடை 6,670 டன் ஆகும். இது மணிக்கு 52 கி.மீ. வேகத்​தில் செல்​லும். இந்த போர்க்​கப்​பலில் மூத்த அதி​காரி​கள், மாலுமிகள் உட்பட 230 வீரர்​கள் பணி​யாற்​றுகின்​றனர்.

ராஜ்நாத் சிங் பாராட்டு

இவ்விழா​வில் அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: எந்​தவொரு நாட்​டுக்​கும் திறமை​யான மற்​றும் உடனடி​யாக எதிர்​வினை​யாற்​றக் கூடிய கடற்​படை எவ்​வளவு அவசி​யம் என்​பதை சமீபத்​திய நிகழ்​வு​கள் மீண்​டும் ஒரு​முறை நமக்கு காட்​டி​யுள்​ளன.

மேற்​காசி​யா​வில் போர் தொடங்​கிய பிறகு, இந்​திய கடற்​படை ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக் ஷா’ மூலம் ரூ.9,000 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை ஏற்​றிச் சென்ற 18 வணி​கக் கப்​பல்​களுக்கு பாது​காப்பு அளித்து அவற்றை வழிநடத்​தி​யது. இது, நமது கடற்​படை வெறும் போர்ப்​படை​யாக மட்​டுமின்​றி, இந்​தி​யா​வின் பொருளா​தார நலன்​களுக்கு வலு​வான பாது​காவல​னாக​வும் விளங்​கு​வதை காட்​டு​கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

SCROLL FOR NEXT