புதுடெல்லி: அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு மிகவும் சிறந்தாக இருக்கும் என்பது ஜென் ஸி தலைமுறையினரிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
1990-களின் பிற்பகுதியிலி ருந்து 2010-களின் தொடக்கம் வரை பிறந்த இளைஞர்கள் ஜென் ஸி தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர உறவுகள் குறித்து அவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற பாரம்பரிய நட்பு நாடுகளைவிட இஸ்ரேல் உடனான இந்தியாவின் நட்பு மிக வலுவானதாக இருக்கும் என, இந்தியா இஸ்ரேல் மையம் ஏஐ தளங்கள் மூலம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 52% பேர், இந்தியா - இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு உறவு மிகவும் வலுவாக இருப்பதாகக் கருதுகின்றனர். இதன்மூலம் ரஷ்யாவுடன் இணைந்து பாதுகாப்புப் பங்களிப்பில் இஸ்ரேலை மூன்றாவது இடத்தில் இளைஞர்கள் வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ் 51 சதவீதத்துடனும், அமெரிக்கா 46 சதவீதத்துடனும் உள்ளன.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 41% பேர் இந்தியாவின் முக்கிய ராஜதந்திர கூட்டாளிகளில் ஒன்றாக இஸ்ரேலை மதிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்காவை (39%) விட அதிகமாகும். பெரும்பான்மையான ஜென் ஸி தலைமுறையினர், இந்தியாவின் முதன்மை பாதுகாப்புப் பங்காளிகளாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவையே கருதி வந்தனர். தற்போது இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு 22 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இந்தியா - இஸ்ரேல் இடையிலான வலுவான கூட்டுறவுக்கு அதிக ஆதரவு அளிப்பது தெரியவந்துள்ளது.