இந்தியா

இந்திய செய்தி சேனல்கள் மீது அமெரிக்க தூதர் விமர்சனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்திய செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சில விஷயங்கள் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தித்தாள் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய செர்ஜியோ கோர், “நான் வீட்டுக்குத் திரும்பியதும் இந்திய செய்தி சேனல்களின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். நேரம் செல்லச் செல்ல நிகழ்ச்சிகள் மிகவும் விசித்திரமாகிவிடுகின்றன. மாலை 6 மணிக்கு ஒரு நிகழ்ச்சியில் எட்டு பேர் விவாதிப்பார்கள். இரவு 10 மணிக்கு, 12 பேர் ஒரே நேரத்தில் பேசுவார்கள். அவர்களில் ஒருவரின் பேச்சைக் கூட தெளிவாகக் கேட்க முடியாது.

அமெரிக்காவில் தவறான தகவல்கள் பரவும் பிரச்சினை தீவிரமாக இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தியத் தொலைக்காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன.

இங்கே ஒளிபரப்பப்படும் சில விஷயங்கள், யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், நேரம் செல்லச் செல்ல அவற்றின் நிகழ்ச்சிகள் மிகவும் விசித்திரமாகின்றன” என தெரிவித்தார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பின்போது திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்தும் செர்ஜியோ கோர் பகிர்ந்துகொண்டார். “ஜி7 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்புக்கு முன்னதாக, பத்திரிகையாளர் சந்திப்புகள் வேண்டாம் என புதுடெல்லி தனது விருப்பத்தை தெரிவித்தது.

மேலும், கேள்விகள் ஏதுமின்றி ஊடகங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரியிருந்தது. பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு முன்பே இந்தக் கோரிக்கை குறித்து ட்ரம்ப்பிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் 'சரி, ஒன்றும் பிரச்சினை இல்லை' என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால், மோடியும் ட்ரம்பும் தங்கள் ஆரம்பகட்ட ஊடகச் சந்திப்பை முடித்த உடனேயே திட்டம் மாறியது. அமெரிக்க அதிபர் கேமராக்களை நோக்கித் திரும்பி, "ஏதேனும் கேள்விகள் உள்ளதா?" என்று கேட்டார். "அதுவே அந்த சந்திப்பை விரிவுபடுத்தியது. அந்த உரையாடல் இறுதியில் 45 நிமிடப் பத்திரிகையாளர் சந்திப்பாக மாறியது.

கேள்விகள் இல்லாமல் ஊடக சந்திப்பை நடத்த இந்திய தரப்பு விரும்பிய நிலையில், அது 45 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பாக மாறிவிட்டது” என செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT