காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல் - செல்போன் எண்களுடன் முகவரியை வெளியிட்ட தீவிரவாதிகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கோயில் ஒன்றில் வழிபாடு மேற்கொண்ட காஷ்மீர் பண்டிட்டுகள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கோயில் ஒன்றில் வழிபாடு மேற்கொண்ட காஷ்மீர் பண்டிட்டுகள்.

Updated on
2 min read

புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வரும் காஷ்மீரி பண்டிட்டுகளை அச்சுறுத்தும் நோக்கில் அவர்களது செல்போன் எண்கள் மற்றும் வீட்டு முகவரிகளை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

1990-ம் ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வந்த பண்டிட்டுகள் அச்சுறுத்தல் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறி, ஜம்மு, புதுடெல்லி என பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த பண்டிட்டுகளை, மீண்டும் அவர்களின் பூர்வீக இடத்தில் குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பண்டிட்டுகள் பலர் மீண்டும் காஷ்மீரில் வசிக்கத் தொடங்கினர். இந்நிலையில், இந்த முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கில், அப்பகுதி தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் ஒரு சதி கண்டறியப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் தங்கியுள்ள பண்டிட் சமூகத்தினரை மீண்டும் வெளியேற்றும் முயற்சிகளை கையில் எடுத்துள்ள தீவிரவாதிகள், அதன் ஒரு பகுதியாக அவர்களின் வீடு, கதவு எண் உட்பட துல்லியமான முகவரிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அந்த வீடுகளில் வாழும் பெரும்பாலான உறுப்பினர்களின் கைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செயலை, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய 'யுனைடெட் லிபரேஷன் கவுன்சில்' என்ற அமைப்பு செய்வதாகப் பேசப்படுகிறது. இந்த அமைப்பே இந்த அச்சுறுத்தல்களை விடுத்ததாகக் கருதப்படுகிறது.

பிரதமரின் மறுவாழ்வுத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த தகவல்களும் இதில் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இம்முறை, இந்தக் கடிதங்கள் முன்பை விட விரிவான விவரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கடிதங்களில், பள்ளத்தாக்கிற்குத் திரும்பிய காஷ்மீரி பண்டிட்டுகளை ‘துரோகிகள்’ என்றும் ‘வெள்ளை காலர் பயங்கரவாதிகள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. காஷ்மீர் பண்டிட்டுக்களுக்கான மறுவாழ்வு மற்றும் அவர்கள் தங்கள் சொத்துக்களைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

காஷ்மீர் பண்டிட்டுகள் இத்தகைய முறையில் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் இதே போன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தபோது சிறுபான்மை அரசு ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்ற நிர்வாகம் அனுமதித்தது.

காஷ்மீரி பண்டிட்டுகள் மீதான இந்த அச்சுறுத்தல்கள், 1990-ஆம் ஆண்டில் நிலவியதைப் போன்றதொரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தமுறை பாதுகாப்புப் படையினர் முழு விழிப்புடன் இருப்பதாகத் தெரிகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கில் உள்ள தற்காலிக முகாம்களில் பாதுகாப்பையும் அரசு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு முகமைகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. அரசுத் தலைமையகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலை எதிர்பார்த்து அரசு முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளைத் துவக்கியது. சந்தேகத்திற்கு உரிய சுமார் 3,000 பேர் வளைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களாக சந்தேகிக்கப்படுகிறது.

2022-ல் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது தீவிரவாதிகள் ஒரு தாக்குதலை நடத்தினர். இதில், 5பண்டிட்டுகள் பலியாகினர். இதை கண்டித்து காஷ்மீரி பண்டிட்டுகள் 7 மாதங்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, அரசு பணியிலுள்ள பண்டிட்டுகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பிரதமர் மறுவாழ்வு தொகுப்பு திட்டத்தின் கீழ் சுமார் 6,000 பண்டிட்டுகள் பயன்பெற்றனர். இவர்களுக்கு 2010 இல் அரசு பணிகள் அளிக்கப்பட்டன. 1990-ல் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுக்களை மீண்டும் குடியேற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு அரசு, விடுமுறை அளித்து அனுப்பியுள்ளது. சுதந்திரதினக் கொண்டாட்டம் முடிந்த பின் ஆகஸ்ட் 25 இல் பணிக்கு திரும்பும்படி அறிவுறுத்தி இருந்தது. இச்சூழலில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மீது பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கோயில் ஒன்றில் வழிபாடு மேற்கொண்ட காஷ்மீர் பண்டிட்டுகள்.</p></div>
“நாட்டின் பாரம்பரியத்தை ஏன் அழிக்கிறீர்கள்?” - ராகுலின் மனுஸ்மிருதி கருத்துக்கு யோகி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in