ரிஷிகேஷ்: நாட்டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நாட்டில் கடல் வழித்தடம் மற்றும் நீர்நிலைகள் அதிகளவில் உள்ளன. விமான நிலையம் அமைக்க முடியாத இடங்களில் கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதியாக கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்த ஸ்கைஹாப் ஏவியேஷன் என்ற நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் கடந்த 6ம் தேதி தனது பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தது. கடல் விமானம் கங்கை நதியில் சுமூகமாக தரையிறங்கி, மேலெழும்பியதன் மூலம் இங்கு கடல் விமான போக்குவரத்து சாத்தியமாகும் எனத் தெரிகிறது.
இது குறித்து ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனத்தின் நிறுவனர் அவானி சிங் கூறியதாவது: ஸ்கைஹாப் நிறுவனத்தின் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் தனது பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
விமான போக்குவரத்துக்கான சான்றிதழ் பெறும் நடவடிக்கையில் நாங்கள் இறங்கியுள்ளோம். சான்றிதழ் கிடைத்தவுடன் வர்த்தக ரீதியாக நாங்கள் கடல் விமான போக்குவரத்தை தொடங்குவோம்.
லட்சத் தீவு பகுதியிலும் ஸ்கைஹாப் நிறுவனம் கடல் விமான போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இங்கு ஐந்து தீவுகளை இணைக்கும் வகையில் 19 இருக்கைகள் கொண்ட கடல் விமானத்தை முதல் கட்டமாக இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.