புதுடெல்லி: இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தீபாவளியை ஒட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2001-ல் டெல்லி அசோகா சாலையில் பாஜக தலைமை அலுவலகம் செயல்பட்டது. அப்போது ஒருநாள் எனது அறைக்குள் செய்தியாளர்கள் திடீரென நுழைந்தனர். சிலர் அன்போடு எனது சட்டை காலரை பிடித்து இழுத்தனர். சிலர் இனிப்புகளை வாங்கித் தருமாறு நிர்பந்தம் செய்தனர்.
என்ன விசேஷம், எதற்காக இப்போது இனிப்புகளை கேட்கிறீர்கள் என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினேன். அப்போது அவர்கள், “நீங்கள்தான் அடுத்தகுஜராத் முதல்வர், அதை கொண்டாடவே இனிப்புகளை வாங்க கோருகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நான் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது செய்தியாளர்கள் மூலமாகவே எனக்குத் தெரியவந்தது. ஏராளமான செய்தியாளர்கள் தங்களது சொந்த செலவில் எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
பூகம்பம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது செய்தியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து செய்திகளை சேகரிக்கின்றனர். அவர்களது தன்னலமற்ற சேவையைப் பாராட்டுகிறேன். ஊடகத் துறை அபாரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா முன்வரிசையில் உள்ளது. அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் யுபிஐ பணப் பரிமாற்றம், ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்” என்று புகழாரம் சூட்டப்பட்டு உள்ளது. இதுபோல பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. இந்த சாதனைகளை இந்திய ஊடகங்கள் உலகறியச் செய்ய வேண்டும். இந்தியர்களின் திறமை, சாதனைகளையும் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.