புதுடெல்லி: 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2025-ல் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க விசாவில் 62% சரிவு ஏற்பட்டுள்ளதாக சிஐஎஸ் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிஐஎஸ் (Center for Immigration Studies) ஆய்வு செய்த தரவுகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த 2024-ம் ஆண்டில் மாணவர் விசா மூலம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 58,694 ஆக இருந்தது. இது 2025-ல் 22,149 ஆக குறைந்துள்ளது. அதாவது, 62% சரிவு ஏற்பட்டுள்ளது.
சீன மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாவிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2024-ல் 61,075 சீன மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியது. இது 2025-ல் 40,034 ஆக சரிந்துள்ளது. இது 34% சரிவைக் காட்டுகிறது.
சர்வதேச கல்விக்கான நிறுவனம் நடத்திய வருடாந்திர கணக்கெடுப்பின்படி, 2024-25 கல்வியாண்டில் அமெரிக்காவில் உயர்கல்வி படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 77 ஆயரத்து 766 ஆக இருந்தது. இதில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 019 ஆகவும், சீன மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்து 919 ஆகவும் இருந்தது.
மொத்த வெளிநாட்டு மாணவர்களின் இது 53 சதவீதமாக இருந்தது. இந்த மாற்றம் அமெரிக்க மாணவர்களுக்கு சாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது.