புதுடெல்லி: இந்திய ரயில்வே அகல ரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் அகல ரயில் பாதையில் 99.6% ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதையில் 2026 மே 31ம் தேதி நிலவரப்படி 70,002 கி.மீ. மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் பாதை மின்மயமாக்கல் கடந்த 1925-ல் தொடங்கியது. நாட்டின் முதல் மின்சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்பில், மகாராஷ்டிராவின் மும்பை விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ஹார்பர் இடையே இயக்கப்பட்டது.
ரயில்வே அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் அகல ரயில்பாதையில் 100% மின்மயமாக்கலை எட்டியுள்ளன. ராஜஸ்தான், தமிழ்நாடு, அசாம், கர்நாடகா, கோவா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 269 கி.மீ. வழித்தடம் மட்டுமே மின்மயமாக்கல் பணியின் கீழ் உள்ளன. இவை தவிர, புதிய பாதைகள் மற்றும் பல வழித்தட திட்டங்கள் அனைத்தும் தற்போது மின்மயமாக்கலுடன் சேர்த்தே அனுமதி அளிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு வருகின்றன.