புதுடெல்லி: ரயில் போக்குவரத்துக்காக, மாதந்தோறும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மின்மயமாக்கலில் இந்திய ரயில்வேயின் முன்னேற்றம் உலகளவில் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. இந்திய ரயில்வே இப்போது உலகின் மிகப் பரவலாக மின்மயமாக்கப்பட்ட பெரிய ரயில் அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சுவிட்சர்லாந்தில் ரயில்கள் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்குகின்றன. 99.6 சதவீதத்துடன் இந்தியா உலகளவில் 2-வது இடத்தில் உள்ளது.
அனைத்து புதிய ரயில் பாதைகளும் மற்றும் கூடுதல் பாதை திட்டங்களும் மின்மயமாக்கலுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகின்றன.
இந்திய ரயில்வேயின் 19 மண்டலங்களில், 15 மண்டலங்கள் 100 சதவீத மின்மயமாக்கலை அடைந்துள்ளன. மீதமுள்ள வடமேற்கு ரயில்வே, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய 4 மண்டலங்களில் மின்மயமாக்கல் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் உள்ள 17 மண்டலங்களில் ரயில்களை இயக்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 295 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.