இந்தியா

விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழியும் இந்தியச் சிறைகள் - தரவுகள் சொல்வது என்ன?

ஆர்.முத்துக்குமார்

புதுடெல்லி: விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்தால் இந்திய சிறைகள் கைதிகள் நிரம்பி வழியும் இடமாக மாறி வருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ‘தி இந்து ஆங்கிலம்’ நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரையின் விவரம்: தேசிய குற்றப் பதிவுக் கழகம் (National Crime Records Bureau) வெளியிட்ட சமீபத்திய சிறைப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியச் சிறைகளில் கைதிகள் நிரம்பும் விகிதம் 2024-ஆம் ஆண்டில் பத்தாண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 112.7% ஆகக் குறைந்திருந்தாலும், விசாரணைக் கைதிகளின் அதிக எண்ணிக்கையால் இந்தியச் சிறைகளில் நெரிசல் ஒரு தொடர்ச்சியான பிரச்சனையாக நீடிக்கிறது என்று தரவுகள் காட்டுகின்றன.

மேலும், போதுமான இடவசதியின்மை, விரிவாக்கமின்மை மற்றும் அதிக அளவிலான பணியாளர் காலிப் பணியிடங்கள் போன்ற பிற கவலைகளையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறைகள் இன்னும் தங்களது அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட அதிகமான கைதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. 2024-ஆம் ஆண்டு இறுதியில் நாட்டில் சுமார் 1,333 சிறைகள் இருந்த நிலையில், அவற்றின் மொத்தக் கொள்ளளவு 4.53 லட்சம் கைதிகள் மட்டுமே. ஆனால், சிறைகளில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 5.11 லட்சத்தைத் தாண்டியதால், நாடு முழுவதும் சிறை நெரிசல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நாடாளுமன்றக் குழுவின் ‘சிறை நிலைமைகள், உள்கட்டமைப்பு மற்றும் சீர்த்திருத்தங்கள்’ (Prison – Conditions, Infrastructure and Reforms) என்ற அறிக்கை, சிறைகளில் நிலவும் அதிக நெரிசல் வள ஆதாரங்களின் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு, கைதிகளின் வாழ்வாதாரத் தரத்தை பாதிக்கிறது என்றும், கைதிகளிடையே பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சுகாதார வசதிகள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களை அணுகுவதிலும் இது தடையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்துக்கு முன்புடன் ஒப்பிடும்போது சிறைகளின் மொத்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், 2015 முதல் 2024 வரை சிறைகளின் கொள்ளளவு 24% அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 2,268 சிறைகளில் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 120-க்கும் மேற்பட்ட புதிய சிறைகள் கட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், பல மாநிலங்கள் இன்னும் தேவையான அளவுக்கு கொள்ளளவை உயர்த்த முடியாமல் உள்ளன. 2024-ஆம் ஆண்டில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறை நிரப்பு விகிதம் (Occupancy Rate) 100%-ஐ தாண்டியுள்ளது.

டெல்லியில் மிக மோசமான நிலை

நாட்டிலேயே அதிக சிறை நெரிசல் பதிவானது டெல்லியில். 2024-ஆம் ஆண்டில் டெல்லியின் சிறை நிரம்பல் விகிதம் 194% ஆக இருந்தது. 2023-இல் இது 200% ஆக இருந்தது.

அதேபோல், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் 2015-இல் வெறும் 78% ஆக இருந்த விகிதம், 2023 மற்றும் 2024-இல் 148%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மறுபுறம், முன்னர் கடுமையான நெரிசலை சந்தித்த சில மாநிலங்களில் நிலைமை ஓரளவு மேம்பட்டுள்ளது. உதாரணமாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2015-இல் 234% ஆக இருந்த சிறை கைதிகள் நிரப்பு விகிதம், தற்போது 127.6% ஆகக் குறைந்துள்ளது.

சிறை நெரிசலுக்கான முக்கிய காரணமாக விசாரணைக் கைதிகளின் (Undertrials) அதிக எண்ணிக்கை குறிப்பிடப்படுகிறது.

2024-ஆம் ஆண்டில் இந்திய சிறைகளில் இருந்த மொத்த கைதிகளில் 73% பேர் விசாரணைக் கைதிகள். 2021-இல் இந்த விகிதம் 77% ஆக உச்சத்தை எட்டியிருந்தது. தற்போது அது குறைந்திருந்தாலும், கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நிலையை விட இன்னும் அதிகமாகவே உள்ளது.

இதற்கிடையில், தண்டனை பெற்ற கைதிகளின் (Convicts) பங்கு 2016-இல் 32% இருந்த நிலையில், 2024-இல் 26.6% ஆகக் குறைந்துள்ளது.

மாநில வாரியான ஆய்வின்படி, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், விசாரணைக் கைதிகளின் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

டெல்லி மற்றும் பிஹார் ஆகியவை விசாரணைக் கைதிகள் அதிகம் உள்ள முக்கிய பகுதிகளாக உள்ளன. இந்த இரு பகுதிகளிலும் சிறைகளில் உள்ள கைதிகளில் 87%-க்கும் அதிகமானோர் விசாரணைக் கைதிகள் என்பது கவலைக்கிடமான தகவலாகும்.

சிறை நிர்வாகத்தில் நிலவும் பணியாளர் காலிப் பணியிடங்கள் குறித்தும் நாடாளுமன்ற உள்துறை நிலைக்குழு கடும் கவலை தெரிவித்துள்ளது. அதிக சிறை நெரிசல் மற்றும் அதிக விசாரணைக் கைதிகள் கொண்ட டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பணியாளர் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.

SCROLL FOR NEXT