கார்வார்: நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாதனை படைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கோவா, கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கடலில் பயணம் செய்தார்.
கல் வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீரில் இந்தப் பயணத்தை குடியரசுத் தலைவர் மேற்கொண்டார். அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குப் பிறகு நீர்மூழ்கியில் பயணம் செய்த 2-வது இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கர்நாடகாவின் வட கனரா மாவட்டத்திலுள்ள கார்வார் கடற்படைத் தளத்துக்கு, கோவாவில் இருந்து நேற்று காலை குடியரசுத் தலைவர் முர்மு வருகை தந்தார். கடந்த அக்டோபர் மாதம், நாட்டின் மேம்படுத்தப்பட்ட பன்முகத் தாக்குதல் திறன் கொண்ட போர் விமானமான ரஃபேலில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பறந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முதல்முறையாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்திருந்தார். சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரவுபதி முர்மு, நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கார்வார் கடற்படைத் தளம், நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு மையங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் நாட்டின் கடல்சார் பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை குடியரசுத் தலைவர் முர்மு நேரடியாகப் பார்வையிட்டார்.
இது நாட்டின் பாதுகாப்புத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் தன்னிறைவு மீதான நம்பிக்கையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என்று இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.