சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி
பெய்ஜிங்: இந்தியா, சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இருதரப்பு ஏற்றுமதியை சமநிலைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக சீனாவின் தகவல் தொழில்நுட்பம், மருந்து, வேளாண்துறை சந்தைகளை இந்திய நிறுவனங்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி அண்மையில் சீன வர்த்தக துறை மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டன.
இந்தச் சூழலில் தூதர் விக்ரம் துரைசாமி பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியா, சீனாவுக்கு இடையிலான உறவில் வர்த்தகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவுக்கு அதிக பொருட்களை, குறிப்பாக மருந்துகளை அதிகளவில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். தற்போது சீனாவில் இந்தியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன.
இதன்மூலம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய மருந்துகளின் அளவு கணிசமாக அதிகரிக்கும். மேலும் இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன” என்றார்.