சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், கடந்த 2013-ம் ஆண்டில் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது. தற்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமாரும் (23), அவரது தாய் பர்வீன் ராணியும் பிரிட்டனில் அடுத்தடுத்து மேயர்களாகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் மேயர் நாற்காலியில் அமர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் என்ற பெருமையை துஷார் குமார் பெற்றுள்ளார். துஷார் குமார் ‘எல்ஸ்ட்ரி மற்றும் போஹம்வுட்’ நகர சபையின் மிக இள வயது மேயராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்ற ஒரு வார இடைவெளியில், அவரது தாய் பர்வீன் ராணி ‘ஹெர்ட்ஸ்மியர்’ பெருநகர சபையின் முதல் இந்திய வம்சாவளி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து துஷாரின் தந்தையும் தொழிலதிபருமான சுனில் தஹியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கடந்த மே 13-ம் தேதி துஷார் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மே 20-ம் தேதி பர்வீன் மேயராகப் பதவியேற்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே நேரத்தில் மேயர்களாகப் பொறுப்பேற்றிருப்பது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்’’ என்றார்.
ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கர்கோடா பகுதியின் ரோஹ்னா கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட தஹியா குடும்பத்தினர், பிரிட்டன் செல்வதற்கு முன்பு நீண்ட காலம் ரோஹ்தக்கில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.