நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி, குரான் புனித நூலை சாட்சியாக வைத்து நியூயார்க் நகர மேயராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி (34) போட்டியிட்டார். அப்போது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அதிபர் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
எனினும், இந்த தேர்தலில் மம்தானி வெற்றி பெற்றார். இதன் மூலம் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர், தெற்காசியாவைச் சேர்ந்த முதல் மேயர், ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர், மிக இளம்வயது மேயர் என பல சிறப்புகளைப் பெற்றார்.
இந்நிலையில், மன்ஹாட்டன் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, கைவிடப்பட்ட பழைய சிட்டி ஹால் (சுரங்கப்பாதை) ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயராக மம்தானி பதவியேற்றுக் கொண்டார். அப்போது குரான் நூல் மீது கைவைத்தபடி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அவருடைய அரசியல் கூட்டாளியான நியூயார்க் தலைமை வழக்கறிஞர் லெட்டிஷியா ஜேம்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, நேற்று மதியம் 1 மணிக்கு சிட்டி ஹாலில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொது விழாவில், அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் முன்னிலையில் மீண்டும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படத்தை இயக்கியவர் மீரா நாயர்.
இவருக்கும் உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் மஹமூத் மம்தானிக்கும் பிறந்தவர்தான் ஜோரான் மம்தானி. மம்தானிக்கு 7 வயது இருக்கும் போது, இவரது குடும்பம் நியூயார்க் நகருக்கு புலம் பெயர்ந்தது. 2018-ல் அவர் அமெரிக்க குடிமகன் ஆனார்.