விஜயநகரம்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திராவை சேர்ந்த இளம் பொறியாளர் தனது பிறந்தநாளன்றே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்பிலி பகுதியை சேர்ந்தவர் சிங்கிரெட்டி சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா (26). இவர் அமெரிக்காவின் மிசோரி அருகே செயிண்ட் லூயிஸ் பகுதியில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் எனும் இடத்தில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். பொறியியல் பட்ட மேற்படிப்பு (எம்எஸ்) முடித்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு சிறு வயது முதலே நீச்சலில் ஆர்வம் மிக அதிகம். இவர் அமெரிக்காவில் நீச்சல் பயிற்சியாளராக கூட பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாட சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா மற்றும் அவரது 4 நண்பர்கள் கலிஃபோர்னியாவில் உள்ள மெராமெக் ஸ்டேட் பார்க் பகுதிக்கு சென்றனர். அங்கு உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு சென்று அனைவரும் நீச்சலடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது, திடீரென வெள்ளத்தில் சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்டு, சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் பலன் இல்லை. அதற்குள் சாய் கிருஷ்ணா முழுமையாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு படையினரும் 15 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்று சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணாவை தேடினர். பின்னர், நதிக்கரையில் சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணாவின் சடலம் இருப்பதை கண்டு மீட்டெடுத்தனர். இது குறித்து ஆந்திராவில் உள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து பெற்றோர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணாவுக்கு பல முயற்சிகளுக்கு பின்னர் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அதற்குள், அவர் பிறந்த நாளிலேயே இறந்து விட்டாரே என அவரது பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.