

கோப்புப்படம்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை சுமார் 70 தொகுதிகள் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த தொகுதிகளில் கடந்த தேர்தல்களில் பதிவான வெற்றி-தோல்வி வாக்கு வித்தியாசத்தை விட, தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை, வெற்றி-தோல்வியை எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்) ஏற்படுத்திய பாதிப்பு நிர்ணயிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் காரணமாக சுமார் 70 தொகுதிகள் அதிக வாக்காளர்களை இழந்துள்ளன. இந்த 70-ல் நந்திகிராம், பவானிபூர் போன்ற முக்கியத் தொகுதிகளும் அடங்கும். மேலும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 'மத்துவா' சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளும் முர்ஷிதாபாத், மால்டா மாவட்டங்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளும் அடங்கும்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதிகளில் வெற்றி-தோல்வி வாக்கு வித்தியாசம் 8,000 முதல் 15,000 வாக்குகளுக்குள் இருந்தன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்பகுதிகளில் பல எம்எல்ஏக்கள் வெறும் 1,000 முதல் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தனர்.
ஆனால் தற்போது, இந்த தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை இத் தொகுதிகள் தீர்மானிக்கும் என கருதப்படுகிறது.
எனினும் கடந்த 2021 தேர்தலை விட இம்முறை மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவிக்கிறார். மறுபுறம், கடந்த தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் இம்முறை அந்த எண்ணிக்கை 170-ஐ தாண்டும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். திரிணமூல், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கடும் போட்டி நிலவும் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிரமாகப் போராடி வருகின்றன.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நிலவரப்படி, மேற்கு வங்கம் முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் இருந்து 90.83 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதாவது, கடந்த அக்டோபர் வரை இருந்த மொத்த வாக்காளர்களில் 11.85 சதவீதத்தினர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். இதில் 'பரிசீலனையில் உள்ளவை' என்ற பிரிவின் கீழ் மட்டும் 27.83 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.