புதுடெல்லி: இந்தியாவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்துள்ளதாகவும், தினமும் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் இதில் பயணிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மெட்ரோ ரயில் பாதை 5 நகரங்களில் 248 கி.மீ. ஆக இருந்தது. இது தற்போது 26 நகரங்களில் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “2014-க்கு முன் இருந்த வேகத்திலேயே மெட்ரோ விரிவாக்கம் தொடர்ந்திருந்தால், புனே போன்ற நகரங்கள் பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வளர்ச்சியால் போக்குவரத்து நெரிசலில் செலவாகும் நேரம் குறையும். குடும்பத்துடன் செலவிடும் நேரம் அதிகரிக்கும்.
வேலைத்திறன் உயர்ந்து சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். நகர்ப்புற இந்தியாவுக்காக இத்தகைய மாற்றத்தை உருவாக்கி வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ரூ.21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ திட்டங்களை மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இரு நாட்களுக்குப் பிறகு இத்தகவல் வெளியாகியுள்ளது. ரூ.8,300 கோடி செலவிலான 23 கி.மீ. புனே மெட்ரோ பிங்க் லைன் (பாதை 3) திறந்து வைக்கப்பட்டது. மான் - மாவட்ட நீதிமன்றத்தை இணைக்கும் இந்தப் பாதை, ஹிஞ்சேவாடி ஐடி ஊழியர்களின் பயணத்தை எளிதாக்கும்.
மேலும், ரூ.13,500 கோடி மதிப்பிலான 2ம் கட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் 2ஏ (வானாஸ் – சாந்தனி சவுக்), 2பி (ராம்வாடி – விட்டல்வாடி) 4 (கராடி – கடக்வாஸ்லா (சுமார் 25.52 கி.மீ.)) 4ஏ (நால் ஸ்டாப் – மாணிக் பாக் (சுமார் 6.12 கி.மீ.)) ஆகிய வழித்தடங்கள் அடங்கும். இத்திட்டங்கள் புனேயின் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தி, குடியிருப்புப் பகுதிகள், வணிக மையங்கள், ஐடி மையங்களி்டையிலான இணைப்பை மேம்படுத்தி, நெரிசலைக் குறைக்கும்.