சிகாகோ: உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகத் தொடரும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: உக்ரைன்-ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடையேயான போர், வரி விதிப்புப் பிரச்சினைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான எரிபொருள் மற்றும் உரம் விநியோகத் தடைகள் போன்ற உலகளாவிய சவால்கள் காணப்படுகின்றன.
ஆனால், இதற்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ச்சியாக 7 சதவீதம் அல்லது அதற்கு மேல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி வேகம் தொடர்ந்து பராமரிக்கப்படும். சர்வதேச சந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் கொள்முதல் விலை ரூ.3,000 ஆக உள்ள நிலையில், மத்திய அரசு ரூ.2,700 மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு வெறும் ரூ.300 என்ற விலையில் வழங்கி வருகிறது.
பன்முக சர்வதேச அமைப்புகளின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளதால், பல்வேறு நாடுகளுடன் நேரடி இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் கடன் அ ளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்குக் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு நிதியமைச்சர் பேசினார்.