புதுடெல்லி: அமெரிக்காவில் ரூ.26 லட்சத்துக்கு விற்பனையாகும் எச்ஐவி மருந்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெறும் ரூ.3,700-க்கு இந்திய நிறுவனம் வழங்குகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘கிலியட் சயின்சஸ்’ என்கிற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘லெனாகாபவிர்’ எச்ஐவி(எய்ட்ஸ்) தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு நவீன ஊசி மருந்தாகும். இதுவரை எச்ஐவி தடுப்புக்காக தினசரி மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. ஆனால், லெனாகாபவிர் ஊசியை ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே செலுத்திக்கொண்டால் போதுமானது. மருத்துவப் பரிசோதனைகளில் இந்த மருந்து எச்ஐவி தொற்றைத் தடுப்பதில் கிட்டத்தட்ட 100 சதவீத செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்திய மருந்து நிறுவனமான ‘ஹெட்டிரோ’, லெனாகாபவிர் ஊசியை ஆப்பிரிக்க நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 28,000 டாலர் (சுமார் ரூ.26 லட்சத்துக்கும் மேல்) விலையில் விற்கப்படும் இந்த உயிர்காக்கும் மருந்து, இனி ஆப்பிரிக்க நாடுகளில் ஒருவருக்கு ஆண்டுக்கு வெறும் 40 டாலர் (சுமார் ரூ.3,700) என்ற விலையில் கிடைக்கவுள்ளது.
ஹெட்டிரோ நிறுவனம், முதற்கட்டமாக 3 லட்சம் குப்பிகளை ஆப்பிரிக்க நாடுகளான சாம்பியா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவற்றுக்கு அனுப்பும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதில் முதல் தொகுப்பு மருந்துகள் ஏற்கெனவே சாம்பியாவைச் சென்றடைந்துள்ளதாகவும், தொடர்ந்து உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 120 நாடுகளில் இந்த மருந்தை விநியோகிப்பதற்காக, ஹெட்டிரோ, டாக்டர் ரெட்டீஸ், எம்கியூர் உள்ளிட்ட 6 ஜெனரிக் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிலியட் சயின்சஸ் நிறுவனம் ராயல்டி இல்லாத உரிமத்தை வழங்கியுள்ளது. குளோபல் ஃபண்ட் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முன்பண நிதியுதவி மற்றும் கொள்முதல் உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.
இதனால் அசல் விலையை விட 99.8 சதவீதம் குறைவான விலையில் இம்மருந்து வழங்கப்படுகிறது. ஆரம்பகட்ட விநியோகங்களுக்குப் பிறகு, 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜெனரிக் லெனாகாபவிர் மருந்தை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஹெட்டிரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, வரும் மாதங்களில் இந்த மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.