புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்க உள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,”போர்க்களத்தில் சோதிக்கப்பட்ட ‘எப்ஜிஎம்-148 ஜாவலின்’ என்று அழைக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐஐஎஸ்எஸ் ஷங்ரி-லா உரையாடலில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் குறிப்பிட்டதை போல, இது அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு உறவில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். மேலும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு உற்பத்தி வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச நிலையைக் எட்டியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எத்தனை ஏவுகணை அமைப்புகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை செர்ஜியோ கோர் தெரிவிக்கவில்லை. ‘எப்ஜிஎம்-148 ஜாவலின்’ என்பது ஒரு கையடக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பாகும். இது கவச இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எப்படி இயங்கும்?
தோளில் சுமந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை அமைப்பில் தானியங்கி வழிகாட்டும் முறை உள்ளது. இதன் மூலம் ஏவுகணை ஏவப்பட்ட பிறகும் தன் இலக்கைத் தானாகவே பின்தொடர்ந்து தாக்கும்.
இதனால் அதை ஏவிய வீரர் உடனடியாக மறைவிடத்துக்குச் சென்று, எதிரியின் பதில்தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். இந்த ஏவுகணை, பீரங்கியின் மேற்பகுதியில் உள்ள, வீரர்கள் உள்ளே நுழையும் ஹாட்ச் பகுதியை தாக்குகிறது. இது ஏவப்பட்டதிலிருந்து இலக்கைத் தாக்கும் வரை, ‘U’ வடிவப் பாதையில் பறந்து சென்று, துல்லியமாக இலக்கை தாக்கும்.