புதுடெல்லி: இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும் 15-ஆவது ‘மைத்ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 85 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றது. இந்திய ராணுவத்தின் சார்பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவின் வீரர்களும், தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 3-ஆவது பட்டாலியன் வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
இரு நாடுகளின் படைகளும் தங்கள் செயல்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், நவீன ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களையும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் போது காட்சிப்படுத்தவுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘மைத்ரீ’ ராணுவப் பயிற்சி, இரு நாட்டு ராணுவப் படைகளுக்கு இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், பரஸ்பர புரிதலை அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளது.