இந்தியா

இந்தியா - இலங்கை இருதரப்பு கடற்படை பயிற்சி: கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - இலங்கை இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இருதரப்பு கடற்படைப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை - இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சியான ஸ்லினெக்ஸ்-26-ன் 13-வது பதிப்பு, செப்டம்பர் 17 முதல் 21 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய கடற்படை சார்பில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் கவரட்டியும், கடற்படை எரிபொருள் நிரப்பும் கப்பலான ஐஎன்எஸ் ஜோதியும் இதில் பங்கேற்றுள்ளன. இலங்கைக் கடற்படை சார்பில் எஸ்எல்என்எஸ் சிந்துராலா இதில் பங்கேற்றுள்ளது.

இப்பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையே கடல்சார் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாடு, பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஸ்லினெக்ஸ்-26 பயிற்சியானது, பாதுகாப்பான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய கடல்சார் சூழலுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT