இந்தியா

நேபாள பெருவெள்ளம்: 10 டன் நிவாரண பொருட்கள், மருந்துகளை இந்தியா அனுப்பியது

வேட்டையன்

புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 750 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 133 பேர் இந்தியர்கள். இந்நிலையில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு 10 டன் நிவாரண பொருட்கள், மருந்துகளை இந்தியா அனுப்பி உள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படை எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு சி-130ஜே வானூர்தி மூலம் சுமார் 10 டன் நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது.

இதோடு சி-17 மற்றும் சி-130 வானூர்தி மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப உள்ளோம். மேலும், மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களும் செல்கிறது என்று அந்த பதிவில் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அந்த நிவாரண பொருட்களும், மருந்துகளும் நேபாளம் சென்றடைந்தது. அதை இந்தியா அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்துள்ளார்.

நேபாளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 100 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT