மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல்
அகமதாபாத்: அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ‘ஹெல்த்கேர் சம்மிட் 2026’ நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் பேசியதாவது:
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும், மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் செயற்கை நுண்ணறிவு ஒரு ‘உந்துசக்தியாக’ செயல்படும். பிற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை இந்திய மருந்து தொழில் தொடர்ந்து உற்பத்தி செய்வதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. மரபணு ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மக்கள்தொகைக்கு ‘அனைவருக்கும் ஒரே சிகிச்சை’ என்ற அணுகுமுறை பொருந்தாது.
இதன் காரணமாக ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தன்மை வாய்ந்த சிகிச்சையை வழங்க செயற்கை நுண்ணறிவு அவசியம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா, ‘உலகின் மருந்தகம்’ என்ற அடையாளத்தைத் தாண்டி, ‘உலகின் ஆய்வகமாக’ மாற வேண்டும்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவு இடங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட நோய் கண்டறியும் வசதிகள் பற்றாக்குறை, தொற்று மற்றும் தொற்றா நோய்களின் இரட்டைச் சுமை ஆகியவை நிலவுகின்றன.
ரூ.5,000 கோடி முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘பார்மா-மெட்டெக் துறையில் ஆராய்ச்சி, புத்தாக்கத்தை மேம்படுத்தும் திட்டம்’ மூலம், கல்வி நிறுவனங்களை தொழில் துறையுடன் இணைத்து, செலவு அடிப்படையிலான உற்பத்தியிலிருந்து புத்தாக்க அடிப்படையிலான வளர்ச்சிக்கு நாடு நகர்கிறது.
மது நேத்ரா ஏஐ, இ-சஞ்சீவனி தேசிய தொலைமருத்துவ வலையமைப்பு உள்ளிட்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. டெல்லி எய்ம்ஸ், ரிஷிகேஷ் எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் ஆகிய 3 மருத்துவமனைகள் சுகாதாரத் துறையில் ஏஐ-க்கான 'சிறப்பு மையங்களாக' அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.