புதுடெல்லி: பிரம்மோஸ் ஏவுகணை, அகஸ்தீர் வான்பாதுகாப்பு ஏவுகணை ஆகியவற்றை விற்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கின்றன. அதிவேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை நிலப்பகுதியிலிருந்தும், கடலில் இருந்தும், வானில் இருந்தும் வீச முடியும். இந்தியாவிடம் இருந்து முதன் முதலில் பிரமோஸ் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலருக்கு வாங்க பிலிப்பைன்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதை உரியகாலத்தில் இந்தியா விநியோகித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதனால் பிரம்மோஸ் ஏவுகணை பிரபலமடைந்து வருகிறது. பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஈரான் போரை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், அகஸ்தீர் வான் பாதுகாப்பு கருவிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் - இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகள் இடையே சமீபகாலமாக வர்த்தக உறவுகள் மேம்பட்டு வருகின்றன. எரிசக்தி மற்றும் ராணுவ தளவாடங்களை இணைந்து தயாரிப்பது தொடர்பாக இருதரப்பு இடையே சமீபத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.