புதுடெல்லி: ‘புல்லடின் ஆஃப் தி அடாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீண்ட தூர ஏவுகணைகளுடன் இந்தியாவின் தற்காப்பு திறன் மேம்பட்டுள்ளது. இந்தியாவிடம் சுமார் 190 அணு குண்டுகள் இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
இருப்பினும், அணு ஆயுதங்கள் இருப்பது மட்டுமே போதுமானதல்ல; எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளும் அவசியமாகும். அந்த வகையில், இந்தியா சக்திவாய்ந்த அணுகுண்டுகள் மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளைக் கொண்டிருப்பதுடன், எதிரி நாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் நீண்டதூர ஏவுகணை அமைப்புகளையும் கொண்டுள்ளது.
இந்தியா, முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. அதே வேளையில், அணு ஆயுதங்களை செலுத்தும் அமைப்புகளைத் தொடர்ந்து நவீனப்படுத்தி வருகிறது. தரை, வான், கடல் வழியே தாக்கும் முழுமையான ‘நியூக்ளியர் ட்ரையாட்’ கட்டமைப்பை இயக்கி வருகிறது.
அணு ஆயுதங்களில் ரகசியம் காக்கும் இந்தியா தன்னுடைய உத்திசார் ஆயுதங்களின் முழுமையான திறன், விரிவாக்க முறைகள், அவற்றின் உண்மையான தாக்குதல் எல்லை ஆகியவற்றை ஒருபோதும் பகிரங்கமாக வெளியிடுவதில்லை. எனவே, பொதுவெளியில் அறியப்படும் தரவுகள் முழுமையான திறனைக் குறிப்பவை அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.