இந்தியா

சிந்து நதி ஒப்பந்த ரத்து தொடரும்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி இந்தியாவில் 780 கி.மீ., பாகிஸ்தானில் 2,170 கி.மீ. தொலைவுக்கு பாய்கிறது. இந்த நதி கட்டமைப்பில் மொத்தம் 6 நதிகள் உள்ளன. உலக வங்கியின் தலையீட்டால் கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளின் நீரை இந்தியாவும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உடன்பாடு எட்டப்பட்டது. இந்த சூழலில் 2025 ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் மூத்த அமைச்சர்கள் அட்டாவுல்லா தரார், முசாதிக் மாலிக் ஆகியோர் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு உரிய சிந்து நதியின் நீரை கோரும் கைகளை வெட்டுவோம்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதன் காரணமாகவே ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து அமலில் இருக்கும்’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT